பேசாலை, இலங்கை – இலங்கையின் வடக்கில் மன்னார் மாவட்டத்திலுள்ள தனது வீட்டின் வெளிப்புறத்திலுள்ள பிளாஸ்டிக் பாயில் ஸ்ரெப்பி பென்சினா தனது கல்விச் சான்றிதழ்களை பரப்புகின்றார். அவ் வேளையில் அவரின் கரங்கள் உணர்வுக் கிளர்ச்சியினால் நடுங்குகின்றன.
அவற்றை மீண்டும் பிரதி செய்வதற்காக ஒழுங்குபடுத்துகின்றார். மீண்டும்!
‘ஒவ்வொரு வேலைக்கு விண்ணப்பிக்கும்போது என்னுடைய கல்விச்சான்றிதழ்களை பிரதி செய்ய வேண்டியுள்ளது’ என அவர் கூறுகிறார்.
பென்சினா இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வேலை தேடி வருகிறார். 2017ம் ஆண்டு அவரும் அவரது குடும்பத்தினரும் இந்தியாவிலுள்ள அகதிகள் முகாமிலுருந்து நாடு திரும்பினர். அகதிகளாக இருந்தவர்களுக்கு வேலை வாய்ப்பென்பது கடினமாக உள்ளது என அவர் கூறுகிறார். இலங்கையின் வட பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வன்முறைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மையின் நிமித்தமாக யுத்தம் நிறைவுற்றதை குறித்து உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவரும் அவரது குடும்பத்தினரும் எட்டு வருடமாக நாட்டிற்கு திரும்புவதற்காக காத்திருந்தனர்.
இந்தியாவின் தெற்கில் தனது குடும்பத்துடன் வாழ்ந்த அகதிகள் முகாம் இருந்த பகுதியில் அமைந்துள்ள தமிழகத்தின் அரச கல்லூரி ஒன்றில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றிருந்த போதும், தனது தாயகத்தில் வேலையினை பெற்றுக் கொள்வதில் அவர் வெற்றி பெறவில்லை.
2018ல் இலஙகையின் வர்த்தக தலைநகரமான கொழும்பில் கோப்பஸ் எனும் தனியார் நிறுவனத்தில் பென்சினாவிற்கு வேலை கிடைத்தது.
ஆனால், வேலை செய்ய ஆரம்பித்து இரண்டு நாட்களில் இராஜினாமா செய்தார்.
‘எல்லாமே எனக்கு புதுசு. எனக்கு சரியான பயமா இருந்திது.’ என கூறுகிறார்.
கொழும்பில் வேலை செய்யும் இடங்களிலுள்ள கலாச்சாரமானது அவர் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருந்தது. நாட்டின் மேலாதிக்க மொழியான சிங்களத்தில் அவர் பேசுவதில்லை. நாட்டின் உத்தியோக பூர்வ மொழியில் ஒன்றாக தமிழ் இருந்த போதிலும், பல வணிக மற்றும் அரச நிறுவனங்கள் பென்சினாவை போன்று தமிழ் மொழியில் பேசுவர்களுக்கு இடமளிப்பதில்லை.
ஆகையால், பென்சினா தனது சொந்த மாவட்டமான மன்னாரருக்கு திரும்பிச் செல்லுவதற்கு தீர்மானித்தார். முக்கியமாக அரசாங்க உத்தியோகங்களுக்கு தான் விண்ணப்பங்களை செய்வதாக அவர் கூறுகிறார்.
எனினும் அவ்வாறான உத்தியோகங்கள் அமைவது கடினமாயுள்ளது;
இன்னுமொரு வேலைக்காக விண்ணப்பிக்க ஆயத்தமாகின போதிலும் வேலைக்கான நேர்காணல்களை குறித்து தாம் அச்சம் அடைவதாக அவர் கூறுகிறார்.
‘நான் பல பட்டப் படிப்புகளையும், மேலதிகமான படிப்புகளையும் மற்றும் பல பட்டறைகளையும் முடித்துவிட்டேன்,’ என்கிறார் அவர். ‘வேலையின்மை மிகவும் மனச் சோர்வை ஏற்படுத்துகிறது.’
இந்தியாவின் பாடசாலைகளில் பட்டப் படிப்பை மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து அகதி முகாம்களிலிருந்து திரும்பிய பலருக்கு, யுத்தம் முடிவடைந்து பல வருடங்களான பிறகும் வேலை கிடைப்பதென்பது மிகப் பெரிய சவாலாக உள்ளது. 2017ல் வேலை வாய்ப்பின்மை மன்னார் மாவட்டத்தில் 3.4 முதல் 4.8 சதவீதமாக உள்ள போதிலும் வேலையில்லாத அகதிகளின் சதவீதத்தை தீர்மானிப்பதற்கான தரவுகள் இல்லை.
இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகள், அந் நாட்டின் பிரஜா உரிமை இல்லாமையால் தொழில்சார் வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்ள முடியாது உள்ளனர். மீண்டும் இங்கு வந்த பிறகும் அவர்களுக்கான வாய்ப்புகளில் முன்னேற்றமில்லை. அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) 2016ம் ஆண்டிற்கான இலங்கைக்குத் திரும்பும் அகதிகளை குறித்த ஆய்வின்படி, 77 சதவீதமானோரின் முக்கிய கவலை ‘வாழ்வாதார வாய்ப்புகள் இல்லாதது அல்லது இல்லை’ என்பதாகும்.
1983 முதல் 2009 வரை நடந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் நிமித்தமாக 300,000க்கும் அதிகமான இலங்கையர்கள், இந்தியாவில் புகலிடத்தை நாடினார்கள். தற்போது, அதிகமானோர் இலங்கைக்கு மீண்டும் திரும்பி வந்து வேலை தேடுகின்றனர் என தாயகம் திரும்பியோர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பழனியாண்டி நாகேந்திரன் கூறுகிறார்.
2016 ஆண்டின்படி, 64,144 அகதிகள் தமிழகத்தின் 107 முகாம்களில் வாழ்ந்தனர் இதைத் தவிர மேலதிகமாக 36,861 அகதிகள் முறையான அகதிகள் முகாம்களில் இல்லாது உள்ளூர் காவல்துறையில் பதிவு செய்த பின்னர் வெளி இடங்களில் தங்கியிருந்தார்கள்.
மாவட்ட செயலக பதிவுகளின்படி உள்நாட்டு யுத்தம் முடிந்தபின் 2,709 பேர் மன்னார் மாவட்டத்தில் தமது ஊர்களுக்குத் திரும்பியிருக்கின்றனர்.
ஆனால், வேலைகளுக்கான போட்டிகள், விசேடமாக அரசாங்க வேலைகளுக்கான போட்டிகள் கடுமையாக உள்ளன.
‘இங்க உள்ள எல்லாரிடயும் மென்டாலிட்டி என்னண்டா, கவர்ண்மென்ற் வேலை செக்கியுரிட்டி, சேவ்டி.’ எனும் பென்சினா மேலும் மக்கள் பெண்ணையும் மாப்பிளையும் அரசாங்க உத்தியோகத்திலிருப்பவர்களாக தேடுகின்றார்கள் என்றார்.
27 வருடங்களுக்கும் அதிமாக இந்தியாவில் அகதியாக வாழ்ந்து, 2012ல் இலங்கைக்கு திரும்பி வந்த ஞானப்பிரகாசம் ராஜ் வின்சன் இக் கருத்தை ஏற்றுக் கொள்கிறார்.
இவர் இந்தியாவில் இருக்கும் போது சமூகப்பணியில் மற்றும் கலையியலில் பட்டப் படிப்புகளை மேற் கொண்டு பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் சமச்சான்றிதழ்களை வைத்திருக்கிறார்.
இந்தியாவின் அரசு சாரா நிறுவனங்களில், குறுகிய கால வேலைகளில் தனது நிபுணத்துவத்தை பயன்படுத்த தக்கதாக வின்சன் கடமையாற்றினார். ஆனால், சில வருடங்களுக்கு பின்னர் தனது தொழில் வாழ்க்கையை நிறுவும் நம்பிக்கையுடன் இலங்கைக்கு திரும்ப அவர் முடிவு செய்தார்.
‘ரெவ்பூஜின்னா கவர்மெண்ட செக்டர்ல வேலை செய்ய முடியாது,’ என இந்தியாவில் தான் முகம் கொடுத்த சிரமங்களை விளக்குகிறார்.
ஆனால் பல வருடங்களாக வேலைக்காக மன்னார் மாவட்டத்தில் முயற்சி செய்தும், அவருக்கு வேலை கிடைக்கவில்லை.
தற்போது, தனது மனவியையும் மற்றும் இரு பிள்ளைகளையும் பராமரிப்பதற்காக தனக்குரிய 4 ஏக்கர் காணியில் விவசாயம் செய்வதுடன் சில மாணவர்களுக்கு ஆங்கில பாடத்தினை கற்றுக் கொடுக்கிறார்.
தான் அறிந்த பலர் இந்தியாவில் இருந்த போது நன்றாக படித்திருந்தாலும் கட்டிடம் கட்டும் செயற்திட்டங்களிலும் கூலித்தொழில்களிலும் அல்லது சிறிய கடைகளில் வேலை செய்வதிலும் ஈடுபட்டுள்ளனர் என கூறுகிறார். 2016ம் ஆண்டின், யு.என்.எச்.சி.ஆர் ஆய்வில் தேர்ச்சியற்ற நாட் கூலியாட்களின் உழைப்புதான் 33% குடும்பங்களின் வருமானமாக உள்ளது என கூறப்படுகிறது.
மீளத் திரும்பிய பல அகதிகள், அரசாங்க அதிகாரிகள் நியமனங்களில் பாகுபாடு காட்டுவதாக சந்தேகிக்கிறார்கள்.
ஆனால் அது அப்படியல்ல என மன்னார் மாவட்டத்தின், மேலதிக அரசாங்க அதிபர், சிவபாலன் குணபாலன் கூறுகிறார். அரச உத்தியோகத்தர் நியமனத்திற்கான தெரிவுக்குழுவில் ஒருவரான அவர், கிடைக்கக் கூடிய வேலைகள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தவை எனவும் கூறுகிறார்.
உதாரணமாக, 2018ல் 500க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றிய பின்னர் பொருத்தமான அரச அலுவலகங்களுக்கும் திணைக்களங்களுக்கும் அனுப்பப்பட்டதாக கூறினார். 500 பேரில் எத்தனை பேர் அகதிகளாக திரும்பியவர்கள் என உறுதிப் படுத்தக் கூடிய தரவுகள் இல்லை.
குணபாலன் மேலும் விண்ணப்பதாரர்களைக் குறித்து கூறுகையில் ‘இந்தியாவிலிருந்து வந்த பட்டதாரிகளை பொறுத்தவரையில் கூடுதல் நடவடிக்கைகள் தொடர்பாக புள்ளிகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு இருந்திருக்கவில்லை. அதனால் அவர்கள் பெரிதளவு புள்ளிகளை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.’
தாயகம் திரும்பியோர் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளரான பழனியாண்டி நாகேந்திரன் மீளத் திரும்பிய அகதிகளுக்கு எதிராக ஒழுங்கமைக்கப்பட்ட பக்கச்சார்புகள் உள்ளதாக தான் கருதவில்லை என கூறுகிறார். ஆனால், வலுவான நிர்வாகத் தடைகள் விண்ணப்பதாராருக்கு விரோதமாக செயற்படுகின்றன என கூறுகிறார்.
இந்திய அகதி முகாம்களில் பிறந்த இலங்கையர்கள் பெரியவர்களான பிறகு இலங்கை திரும்பும் வேளையில் தங்களது பிறப்புச் சான்றிதழ்களை பெறுவதற்காக நீண்ட செயல்முறைகளுக்கு ஊடாக செல்ல வேண்டியுள்ளது. இலங்கை திரும்பிய அகதிகளில் 6 சதவீதமானமானேர் இலங்கை பிறப்புச் சான்றிதழ்களற்று உள்ளனர் என யு.என்.எச்.சி.ஆர்ரின் கணக்கெடுப்புகள் காண்பிக்கின்றன. மேலும், 15 சதவீதமானோருக்கு தேசிய அடையாள அட்டை இல்லை.
மேலும், பல கஷ்டங்களுக்கும் மத்தியில் பெற்றுக் கொண்ட பட்டப்படிப்புகள் அநேக நேரங்களில் இங்கே அங்கீகாரம் பெற்றவைகளல்ல.
அப்படியானால் தான் அவர்களுக்கு வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நாடு திரும்பிய அகதிகள் இலங்கையின் பொறியிலுக்கு சமமான 3 ஆண்டு டிப்ளோமாவை இந்திய தொழிநுட்பக் கல்லூரிகளில் படித்திருப்பது பொதுவான ஒரு விடயமென நாகேந்திரன் கூறுகிறார்
‘இவை தகுதியானவை என இந்திய பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்டாலும் அவ்வாறான டிப்ளோமாவுக்கு இலங்கையில் அங்கீகாரம் இல்லாத நிலை காணப்படுகிறது’ என்கிறார் அவர்.
சிலருக்கு வேலை தேடுவது என்பது சிக்கலான காரியமாக உள்ளபடியால் நம்பிக்கையற்ற நிலையிலுள்ள தெரிவுகளுக்கு வழிவகுத்துள்ளது என மன்னார் மாவட்டத்தின் ஒரு சமூக செயற்பாட்டாளரான மனோ கிரிதரன் கூறுகிறார். பலர் இந்தியாவிற்கு நாடற்ற அகதிகளாக திரும்புகிறார்கள் அல்லது ஏனைய நாடுகளில் சட்ட விரோதமான வேலை வாய்ப்புகளை நாடுகின்றார்கள்.
வழக்கறிஞர்கள், பல்வேறு பின்னணியில் உள்ளவர்கள் பொது சேவையில் பணியாற்றும்போது சமூகத்திற்கு கிடைக்கும் ஒட்டு மொத்த நன்மைகளை மேற்கோள் காட்டி தாயகம் திரும்பிய அகதிகள் வேலை தேடுவதற்கு உதவுகிறார்கள்.
இந்தியாவிலுள்ள ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தமது தாயகத்திற்கு திரும்புவதற்கு விரும்புகிறார்கள். ஆனால், வேலை வாய்ப்பின்மை அவர்களை தடுத்து நிறுத்துகிறது என நாகேந்திரன் கூறுகிறார்.
‘வாழ்வின் ஆதாரத்தை வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றால் மட்டுமே, அகதிகள் தமிழகத்திலிருந்து தாயகம் திரும்புதல் என்பதும் சாத்தியப்படும்,’ என அவர் கூறுகிறார்.
இக் கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்தவர் ஜொசப்பின் அந்தனி , ஜிபிஜே.